“சீதைக்கு சண்டைக் காட்சிகளா?” - ‘ராமாயணா’ படக் குழு மீது முகேஷ் கண்ணா சாடல்

“சீதைக்கு சண்டைக் காட்சிகளா?” - ‘ராமாயணா’ படக் குழு மீது முகேஷ் கண்ணா சாடல்
Updated on: 
2 min read

நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படத்தில் சீதை குறித்த சர்ச்சைக்குரிய காட்சி பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள மூத்த நடிகர் முகேஷ் கண்ணா, உங்களின் சொந்த கருத்துகளை திணிப்பதை நிறுத்துங்கள் எனவும் வலியுறுத்து உள்ளார்.

‘ராமாயணா’ படம் வெளியாவதற்கு முன்பே அதில் சீதையாக சாய் பல்லவி நடித்திருப்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தற்போது மூத்த பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா, சீதை குறித்த காட்சி ஒன்றுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். 

இது குறித்து தனது யூடியூப் வ்லாகில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் முகேஷ் கண்ணா, “ஜான்ஸியின் ராணி லட்சுமிபாய் போல, வீராங்கனைகளாக காட்டப்படும் நவீன கதாநாயகிகளைப் போல மாதா சீதை சண்டைப் போடுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இரண்டு அல்லது மூன்று அசுரர்களுடன் சீதை சண்டை போடுவதாகவும், அவர்களை அடித்து, உதைப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் தேடிப் பார்த்ததில், வால்மிகி ராமாயணத்தில் இப்படி இல்லை. நான் அறிந்த படித்த வரையிலான ராமாயணங்களிலும் அப்படி இல்லை. சீதை யாருடனும் சண்டை போட்டது இல்லை. அவர் மரியாதைக்குரிய ராமரின் மனைவி. 14 ஆண்டுகள் வனவாசத்தை தனது கணவருடம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்.

அது சீதை செய்த தவறினால் அல்ல. மாறாக தனது தந்தை கைகேயிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற ராமன் முடிவு செய்த காரணத்துக்காக. சீதை அவர் பக்கம் நிற்க முடிவு செய்தார். அவர் ஒருபோதும் வசதிகளையோ, ராஜ சுகங்களையோ கேட்டது இல்லை.

நீங்கள் சீதையின் குணாதிசயத்தை மாற்றி அவர் சண்டை போடுபவர் போல காட்டி இருக்கிறீர்கள். அவர் சண்டை போடுபவர் இல்லை. அப்படி இருந்திருந்தால் ராவணன் தூக்கிச் செல்லும்போதே எதிர்த்து போரிட்டிருக்க வேண்டும். மாறாக அவரை எப்படி அவ்வளவு எளிதாக கடத்தி போயிருக்க முடியும்?

நாங்கள் இந்தக் கதைகளைக் கேட்டும், பார்த்தும் வளர்ந்தோம். சமீபத்தில் கூட மக்கள் கைகட்டி அமர்ந்து ராமலீலா கதை கேட்பதை நான் பார்த்தேன். இப்போது திடீரென சீதை சண்டையிடுவது போலவும், வாள் வீசுவது போலவும் புதிய காட்சிகளை சேர்த்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

சீதையை நீங்கள் ஒரு போர் வீராங்கனையாக காட்டியிருப்பதன் வழியாக நவீன பெண்களை கவர முயற்சித்து உள்ளீர்கள். சிலர் இதை பெண்ணியம் என்பார்கள். எனக்கு பெண்ணியம் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் எனக்கு என்ன புரிகிறது என்றால் பெண்களை வலிமையானவர்களாக காட்ட முயற்சி செய்துள்ளீர்கள்.

அவர்கள் வலிமையானவர்களாக இருக்கலாம். ராமாயணத்தைப் பொறுத்தவரை சீதை சீதையாகவே இருந்தார். அவரை நவீன கொள்கைகளை பிரதிபலிப்பவராக சித்தரிக்கக் கூடாது. அது தவறு” என்று முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் முதல் பாகம் நவ.5 அன்று வெளியானது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். 

நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

“சீதைக்கு சண்டைக் காட்சிகளா?” - ‘ராமாயணா’ படக் குழு மீது முகேஷ் கண்ணா சாடல்
4 நாட்களில் உலகளவில் ரூ.500 கோடி வசூலை எட்டிய ‘ராமாயணா’

X