

தூர்தர்ஷனில் 1990-களில் வெளியான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ‘சக்திமான்’. சிறுவர்களுக்கானது என்றாலும் பெரியவர்களும் இதை விரும்பிப் பார்த்தது உண்டு. பிரபல இந்தி நடிகர் முகேஷ் கன்னா, இந்தத் தொடரை தயாரித்து நடித்தார்.
இந்த சக்திமான் கேரக்டரை கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. சக்தி மானாக ரன்வீர் சிங் நடிக்க இருந்தார். இதற்கு நடிகர் முகேஷ் கன்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அது ஏன் என்பது பற்றி இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “ரன்வீர் சிங்கால் ‘துரந்தர்’, ‘கல்லி பாய்’ அல்லது ‘பத்மாவத்’ படத்தில் ‘அலாவுதீன் கில்ஜி’ போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க முடியும், ஆனால் ‘சக்திமான்’ கேரக்டரில் நடிக்க முடியாது. அதற்குத் தேவையான சரியான தோற்றமும் முகபாவனையும் அவரிடம் இல்லை.
அவருடைய முகம் குறும்புத்தனம் மற்றும் சூழ்ச்சித் தன்மை கொண்டதாகத் தெரிகிறது; ஆனால் ‘சக்திமான்’ கதாபாத்திரம் மிகவும் நேர்மறையான தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதனால் ரன்வீர் சிங் வேண்டாம் என்று சொன்னேன். அதே நேரம் அவர் மோசமான நடிகர் என்று ஒருபோதும் கூறவில்லை. வணிக ரீதியாகப் பார்த்தால் இது முட்டாள்தனமான முடிவாக இருக்கலாம்.
லட்சக் கணக்கில் அல்ல; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காசோலையை நிறுத்தி வைத்திருக்கிறேன். என் அலுவலகத்தில் இருப்பவர்களே, ‘சார், காசோலையை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள். ‘அமைதியாக இருங்கள். இதைப் பற்றி பேசாதீர்கள்’ என்று சொன்னேன். பணத்தைவிட கொள்கைதான் எனக்கு முக்கியம்” என்று கூறியுள்ளார்.