“கரப்பான்பூச்சிகளைப் போல தூக்கி எறிய வேண்டும்” - ‘சக்திமான்’ முகேஷ் கண்ணா பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

முகேஷ் கண்ணா

முகேஷ் கண்ணா

Updated on
1 min read

மும்பை: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என விமர்சித்துள்ள நடிகர் முகேஷ் கண்ணா, அவர்களை உடனடியாக சமூகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

இது குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகேஷ் கண்ணா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட உண்மையான மாணவர்களின் போராட்டமாக இது எனக்குத் தோன்றவில்லை. அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் சில அமைப்புகளால் மாணவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

வீடுகளில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை எப்படி நாம் வெளியே தூக்கி எறிகிறோமோ, அதேபோல பொதுவெளியில் அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய நபர்களையும் சமூகத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், “அரசியல் சதிகளுக்காகப் பயன்படும் இளைஞர்கள், தங்கள் எதிர்கால வாழ்க்கையையும் தொழில் வாய்ப்புகளையும் பாழாக்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் நாளை அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் விசா பெறுவதில் கூடப் பெரிய சிக்கல்களை உருவாக்கும்” என கூறியுள்ளார்.

முன்னதாக, இப்போராட்டம் குறித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரணாவத் விமர்சித்திருந்தது இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது முகேஷ் கண்ணாவின் இந்த பேச்சுக்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>முகேஷ் கண்ணா</p></div>
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in