

சல்மான் கான்
சல்மான் கான், சித்ராங்கதா சிங் நடித்துள்ள ‘மாத்ருபூமி: மே வார்ரெஸ்ட் இன் பீஸ்’ திரைப்படத்தை அபூர்வா லகியா இயக்கியுள்ளார். இந்திய- சீன பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சில பகுதிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சில ஆட்சேபனைகளை எழுப்பியதாகவும், கதையில் மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக, படத்தில் சீனாவை நேரடியாகக் குறிப்பிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் சுமார் 40 சதவிகித காட்சிகளை மீண்டும் படமாக்கியதாகச் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய சல்மான் கான், “இதன் திரைக்கதையை மாற்றுமாறும் மீண்டும் எழுதுமாறும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையல்ல.
நாங்கள் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைப் பற்றியும், அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் இதில் பேசியிருக்கிறோம். இதில் எந்த எதிர்மறையும் இல்லை. சூழ்நிலைகள் அப்படி இருக்கும்” என்றார்.