

சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவின் ஆஸ்கர் விருது ரேஸில் இந்தியாவின் மராத்தி படமான ‘கோந்தல்’ இடம்பெற்றுள்ளது. இதனை அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் மொத்தம் 104 படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘மினோடார்’, ஸ்பெயினின் ‘லா போலா நெக்ரா’, பிரேசிலைச் சேர்ந்த ‘குகுஸ் வோர்ல்ட்’, நார்வே நாட்டைச் சேர்ந்த ‘க்ரோத் ஆப் சாயில்’, ஜெர்மனியின் ‘எவ்ரி டைம்’, இத்தாலியைச் சேர்ந்த ‘தி ஸ்பைரல்’, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘ஆல் ஆப் எ சடன்’, தென்கொரியாவைச் சேர்ந்த ‘பாசிபிள் லவ்’, மெக்ஸிகோவின் ‘ஆன் த ரோடு’, ஈரானின் லேண்ட் ஆப் ஏஞ்சல்ஸ், இந்தியாவின் ‘கோந்தல்’ உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த படங்களாகும்.
சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவுக்கு தகுதி பெற ஒரு படம் 40 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அந்தப் படம் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். படத்தின் 50 சதவீதத்துக்கும் அதிகமான வசனங்கள் ஆங்கிலமாக இல்லாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கான முதல்கட்ட வாக்கெடுப்பு டிசம்பர் 7 முதல் 11 வரை நடைபெறும். இறுதித் தெரிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 15 அன்று அறிவிக்கப்படும்.
விருதுகளுக்கான பரிந்துரைகள் 2027 ஜனவரி 21 அன்று வெளியிடப்படும். ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 14 அன்று ஹாலிவுட்டின் டால்பி அரங்கத்தில் வைத்து நடைபெறும்.
‘கோந்தல்’ படம்: திருமண வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் இளம் பெண் ஒருவரைச் சுற்றி நகரும் இப்படம், கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதை இப்படம் பெற்றது.
சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் இஷிதாதேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி, நிஷாத் போயிர் மற்றும் அனுஜ் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படம் மகாராஷ்டிராவின் பாரம்பரியமான ‘கோந்தல்’ என்ற நாட்டுப்புறச் சடங்குகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
திருமணக் கொண்டாட்டமாகத் தொடங்கும் கதை, பின்னர் ஆசை, பொறாமை, துரோகம் மற்றும் மறைக்கப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் நிறைந்த கதையாக மாறுகிறது.
‘கோந்தல்’ இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது. அதேவேளையில், டொராண்டோ சர்வதேச பட விழாவில் ப்ளாட்ஃபார்ம் விருதை வென்றதன் மூலமாக நாகாலாந்தை மையமாக கொண்ட ‘அங்’ (Angh) படமும் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படமும் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான தகுதி பட்டியலில் தேர்வாகி உள்ளது.