Dhurandhar 2 - விமர்சனம்: ரத்தமும் வன்முறையும் நிறைந்த ஸ்பை த்ரில்லர் எப்படி?
கடந்த ஆண்டு இறுதியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘துரந்தர்’. தேசபக்தி + அதிரடியான ஆக்ஷன் என ஒரு சுவாரஸ்யமான ஸ்பை த்ரில்லர் பாணி படமாக வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்தது. தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரெவெஞ்ச்’ வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில் இருந்து படம் தொடங்குறது. இந்திய உளவாளி ஜஸ்கிரத் சிங் ரங்கி (ரன்வீர் சிங்), ரஹ்மான் டிகைத் மறைவுக்குப் பிறகு பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஹம்சா அலி மசாரி என்ற பெயரில் நிழல் உலக தாதாவாக உருவெடுக்கிறார். மெல்ல மெல்ல பாகிஸ்தானின் அரசியல், பயங்கரவாதம் மற்றும் அதிகார மையங்களுக்குள் ஊடுருவுகிறார்.
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் சன்யாலின் (மாதவன்) வழிகாட்டுதலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரி மேஜர் இக்பால் (அர்ஜுன் ராம்பால்) மற்றும் காவல் துறை அதிகாரி சவுத்ரி அஸ்லம் (சஞ்சய் தத்) ஆகியோருடன் சேர்ந்து கொண்டே பாகிஸ்தானின் பயங்கரவாத உலகை ஆட்டம் காணச் செய்கிறார். இதுவே 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய ‘துரந்தர் 2’ படத்தின் கதை.
முதல் பாகம் பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலகத்தைப் பற்றிய விஷயங்களை மேலோட்டமாக பேசியது என்றால், இப்படம் பல மடங்கு முன்னேறி அப்பட்டமாக பல விஷயங்களை முகத்தில் அறைகிறது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடக் கூடிய படத்துக்கு ஏற்ப ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதியதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர் ஆதித்யா தர். இரண்டு மணி நேரப் படங்களே கூட இடைவேளைக்குப் பிறகு கொட்டாவி வரவைத்துவிடும் சூழலில், பல அடுக்குகள், பல்வேறு கதாபாத்திரங்கள், கற்பனை கலந்து உண்மைச் சம்பவங்கள் என திரைக்கதையை படுநேர்த்தியாகவும் புத்திசாலித்தனமாகவும் எழுதியிருக்கிறார்.
படம் முழுக்க வரும் உண்மைச் சம்பவங்களின் ‘ரெஃபரன்ஸ்களும்’ அவற்றை படத்தில் சேர்த்த விதமும் நம்மையும் அறியாமல் ‘அட’ போடவைக்கிறது.
பணமதிப்பிழப்பு, உ.பி. எம்.எல்.ஏ கொலை, தாவூத் இப்ராஹிம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் என பல சம்பவங்களை ஒன்றோடு ஒன்றை முடிச்சு போட்டிருப்பது நல்ல யோசனை.
முந்தைய பாகத்தில் இருந்ததை விட இதில் வன்முறை ஒருபடி தூக்கலாக உள்ளது. பல இடங்களில் கண்கொண்டு திரையை பார்க்க முடியாத அளவுக்கு வன்முறையும் ரத்தமும் கொப்பளிக்கின்றன. படத்தின் இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறது.
படத்தின் மிகப் பெரிய பலம் ரன்வீர் சிங் தான். முதல் பாகத்தில் அக்ஷய் கன்னாவின் நடிப்பால் ரன்வீர் ஓரங்கட்டப்பட்டதைப் போல தோன்றினாலும், இதில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். படம் முழுவதையும் தனது தோள்களில் தாங்குகிறார்.
ஆனால், ரன்வீரின் நடிப்பைத் தவிர மற்ற கதாபாத்திரங்களுக்குப் பெரிய வேலை இல்லை. குறிப்பாக முதல் பாகத்தில் சாராவுக்கு முக்கியத்துவமான காட்சிகள் இருந்தன. அதில் அவருக்கு வேலையே இல்லை.
சஞ்சய் தத் தனது வழக்கமான மேனரிசத்தை இதிலும் காட்டுகிறார். அர்ஜுன் ராம்பால் கேரக்டர் மிரட்டலாகத் தெரிந்தாலும், முதல் பாகத்தில் இருந்த அந்த வில்லத்தனம் அவரிடம் மிஸ்ஸிங். க்ளைமாக்ஸ் சண்டைக்கு முன்னால் மட்டும் ஸ்கோர் செய்கிறார்.
மாதவன் முதல் பாகத்தைப் போலவே இதில் சிறப்பான நடிப்பு. அவருக்கென சில மாஸ் காட்சிகளும் உண்டு.
சஷ்வத் சச்தேவின் இசை முதல் பாகத்தின் தாக்கத்தை இதில் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்லவேண்டும். பழைய பாடல்களை ('ரஸ்புடின்', 'தம்மா தம்மா') சில இடங்களில் பயன்படுத்தியது உற்சாகத்தைத் தருகின்றன.
திரைக்கதை மேஜிக், வியக்கவைக்கும் மேக்கிங் என்பதைத் தாண்டி படம் முழுக்க ஒருவித பிரச்சார நெடி இருந்துகொண்டே இருப்பது நெருடுகிறது. தற்போது நாட்டை ஆளுவோரின் கருத்துகளையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற விஷயங்களை நியாயப்படுத்துவதற்காகவே காட்சிகளை வலிந்து திணித்திருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. எந்தவித ஆதாரமும் இன்றி போகிற போக்கில் பல விஷயங்களுக்கு இவர்களாகவே சமூக வலைதளங்களில் வலம் வருவது போன்ற தியரிகளை எழுதி இருக்கின்றனர்.
'துரந்தர் 2' தேசப்பற்றையும் ஆக்ஷனையும் சரியான விகிதத்தில் கலந்து ஆடியன்ஸுக்கு தந்திருக்கும் ஒரு ஸ்பை த்ரில்லர். பிரச்சார கருத்துகளை தாண்டி திரைக்கதை அளவில் இப்படம் நிச்சயம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ வரிசையில் முதல் பாகத்துக்கு நியாயம் செய்யும் இரண்டாம் பாகத்தை தந்து தனக்கென ஓர் இடத்தை பிடித்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா தர்.
