One Piece Season 2: கடற்கொள்ளையர்களின் சாகச பயணம் எப்படி? | ஓடிடி திரை அலசல்

One Piece Season 2: கடற்கொள்ளையர்களின் சாகச பயணம் எப்படி? | ஓடிடி திரை அலசல்
Updated on
2 min read

ஜப்பானின் மாங்கா அனிமே வரிசைகளின் ஆகச்சிறந்த தழுவல்களில் ஒன்றாகக் கருதப்படும் 'ஒன் பீஸ்' லைவ் ஆக்‌ஷன் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகியுள்ளது.

கிராண்ட் லைன் நோக்கிய பயணத்தில் லூஃபி மற்றும் அவரது ஸ்ட்ரா ஹேட் குழுவினர் சந்திக்கும் சவால்கள், புதிய நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகியவையே இந்த சீசனின் கதைக்களம். முதல் சீசனில் குழு ஒன்று சேர்வதுதான் தொடரின் பிரதான நோக்கமாக இருந்த நிலையில், இதில் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பும், கிராண்ட் லைன் நோக்கிய அவர்களது சாகசப் பயணமும் கலகலப்பாக விளக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே கதை தொடங்குகிறது. லூஃபி தனது ஆதர்ச கடற்கொள்ளையரான கோல்ட் டி. ரோஜர் தூக்கிலிடப்பட்ட இடத்திற்குச் செல்வதும், அங்கிருந்து மரைன் அதிகாரி கேப்டன் ஸ்மோக்கரின் பிடியிலிருந்து தப்பிப்பதும் என ஆரம்பத்திலேயே ஒரு விறுவிறுப்பை தொடங்குகிறது தொடர்.

அனிமே தொடரில் பல நூறு எபிசோடுகள் கொண்ட இந்தக் கதையை, லைவ் ஆக்‌ஷன் வடிவத்திற்குத் தேவையான மாற்றங்களுடன் சிதைக்காமல் வழங்கியிருப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. குறிப்பாக, அலாபாஸ்டா நாட்டின் இளவரசி விவியின் அறிமுகமும், அந்த நாட்டில் நிலவும் அரசியல் சிக்கல்களும் தொடரின் சுவாரஸ்யத்துக்கு வலு சேர்க்கிறது.

வழக்கம் போல லூஃபியாக துள்ளலான நடிப்பை வழங்கி இருக்கிறார் இனாக்கி கோடாய். முதல் சீசனைப் போலவே லூஃபியின் எதற்கும் அஞ்சாத துணிச்சல், நண்பர்களுக்காக எதையும் செய்யும் பிடிவாதம் ஆகியவற்றுக்காக வைக்கப்பட்ட காட்சிகள் சிறப்பு.

அதேபோல், ஸோரோவின் வாள் வித்தை, குறிப்பாக அவர் மூன்று வாள்களை வாங்கும் காட்சி எடுக்கப்பட்ட விதம் சிறப்பு. இதே போல ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இந்தச் சீசனில் இன்னும் கூடுதலான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்தச் சீசனின் முக்கிய கதாபாத்திரமாக வரும் டோனி டோனி சாப்பர் எனும் ஒரு மான்குட்டி கதாபாத்திரம். சிஜிஐ மூலம் உருவான அதில் மனித உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர் முழுக்க வரும் பல வேடிக்கையான தருணங்கள் தான் பெரும் பலம். கப்பலை விழுங்கும் திமிங்கலம், பிரம்மாண்ட கோல்டு ஃபிஷ், டைனோசர்கள், ராட்சஷ மனிதர்கள் வாழும் தீவு என் ஒவ்வொரு எபிசோடிலும் ஏராளமான ஆச்சர்யங்கள். ஒட்டுமொத்தமாக சீசனுக்கே ஒரு கதைக்களம் என்றாலும் முதல் சீசனைப் போலவே ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு குட்டி ப்ளாட் வைத்திருப்பது புத்திசாலித்தனமான ஐடியா. 

சாஞ்சி மற்றும் ஸோரோவுக்கு இடையிலான ஈகோ மோதல்கள், யூசாப்பின் தற்பெருமை பேசும் குணம் என தொடர் முழுவதும் கலகலப்புக்கு பஞ்சமில்லை. 

அனிமேவில் இருந்த நீண்ட பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, கதையின் முக்கியத் தருணங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். எனினும் அசலின் தரத்தை எங்கும் சிதைக்காதது ஆச்சர்யம். தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் மெய்சிலிர்க்க வைக்கின்றன. கிராண்ட் லைனின் விசித்திரமான தீவுகள், ராட்சத மீன்கள் மற்றும் கப்பலின் வடிவமைப்பு என மிகத் துல்லியமாக் செதுக்கியுள்ளனர். 

லிட்டில் கார்டன் தீவின் பிரம்மாண்டமான காடுகளும், அலாபாஸ்டாவின் பரந்து விரிந்த பாலைவனமும் நம்மை ஒரு புதிய உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. பின்னணி இசையாக அனிமேவில் வரும் புகழ்பெற்ற இசைக் கோர்ப்புகளை ஆங்காங்கே ஒலிக்கச் செய்து உற்சாகப்படுத்துகிறது. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்ட விதம் பிரம்மாண்டம். 

அனிமே கதைகளைத் திரையில் கொண்டு வருவது கடினம், அதையும் தாண்டி எந்தவித நெருடலும் இன்றி அசலை சிதைக்காமல் ஒரு நேர்த்தியான தொடராக கொண்டுவந்த படக்குழுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.  அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை இப்போதே எகிற வைத்துவிட்டது ‘ஸ்ட்ரா ஹேட்’ குழுவினரின் இந்த சாகசப் பயணம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in