

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய- சீன பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தின் பின்னணியில் ‘பேட்டில் ஆஃப் கல் வான்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சல்மான் கான், கர்னல் சந்தோஷ் பாபுவாக நடித்துள்ளார். அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இப் படத்தில், சித்ரங்கடா சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்திய வீரர்களின் துணிச்சலைக் காட்டும் விதமாக உருவாக்கியுள்ள இப்படத்தின் தலைப்பு ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ என்று மாற்றப்பட்டது.
இந்நிலையில் இக்கதையின் சில பகுதிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சில ஆட்சேபனைகளை எழுப்பியதாகவும், கதையில் மாற்றங்களைச் செய்யக் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, படத்தில் சீனாவை நேரடியாகக் குறிப்பிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் சுமார் 40 சதவிகித காட்சிகளை மீண்டும் படமாக்க இருக்கின்றனர். அதில் காதல் காட்சிகள் மற்றும் பிளாஷ்பேக் கதை சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகாது என்று தெரிகிறது.