“தமன்னாவின் காலில் விழவும் தயார்” - அழகை வர்ணித்த சர்ச்சையில் அன்னு கபூர் விளக்கம்

“தமன்னாவின் காலில் விழவும் தயார்” - அழகை வர்ணித்த சர்ச்சையில் அன்னு கபூர் விளக்கம்
Updated on
1 min read

நடிகை தமன்னா, இப்போது இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்தில் அவர் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். இப்பாடல் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர், அப்பாடல் பற்றி பேசும்போது நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று வர்ணித்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தமன்னாவை உருவக்கேலி செய்வதாகப் பலரும் விமர்சித்தனர்.

இதுபற்றி அன்னு கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சிக்காகப் பாடல்களைத் தேர்வு செய்தபோது, ‘ஆஜ் கி ராத்’ பாடலில் தமன்னாவின் கடின உழைப்பையும் நடனத்தையும் பார்த்து வியந்தேன். அதைப் பாராட்டும் விதமாகவே அக்கருத்தைச் சொன்னேன்.

ஒருவருடைய அழகைப் பாராட்டுவது என்பது வேறு, தவறான நோக்கத்தில் பார்ப்பது என்பது வேறு. தமன்னாவுக்கு இதில் வருத்தம் இருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன். 71 வயதான நான் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயார். நான் இதே கருத்தை ஆங்கிலத்தில் ‘மில்கி பாடி’ என்று சொல்லியிருந்தால் யாரும் இவ்வளவு பெரிய பிரச்சினையாக்கி இருக்க மாட்டார்கள். நான் இந்தியில் சொன்னதால் அது தவறாகச் சித்தரிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அன்னு கபூரின் இந்த விளக்கமும் மீண்டும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. மொழியைத் தாண்டி, ஒரு பெண்ணின் உடல் நிறத்தையும் பாகங்களையும் பொதுவெளியில் வர்ணிப்பது நாகரிகமா என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

“தமன்னாவின் காலில் விழவும் தயார்” - அழகை வர்ணித்த சர்ச்சையில் அன்னு கபூர் விளக்கம்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in