

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களாலும் தாக்கிக்கொண்டனர்.
முந்தைய ஒப்பந்தங்கள் காரணமாகத் துப்பாக்கி மோதலில் ஈடுபடவில்லை. இம்மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த மோதல் சம்பவத்தின் பின்னணியில் ‘பேட்டில் ஆப் கல்வான்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் நடிகர் சல்மான் கான், கர்னல் சந்தோஷ் பாபுவாக நடித்துள்ளார்.
அபூர்வா லாகியா இயக்கியுள்ள இப்படத்தில், சித்ரங்கடா சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்திய வீரர்களின் துணிச்சலை காட்டும் விதமாக உருவாக்கியுள்ள இதன் டீஸர் கடந்த 27-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏப்.17-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்குச் சீனாவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், உண்மைகளைத் திரித்துக் கூறியுள்ள தாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தேசபக்தி உணர்வுகளை விதைக்கத் திரைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று சீன ராணுவ நிபுணர் சாங் ஜாங்பிங் கூறியதாகத் தெரிவித்துள்ள குளோபல் டைம்ஸ், எந்த படமும் கல்வான் மோதலின் உண்மைகளை மாற்ற முடியாது என்றும் இந்திய வீரர்கள் தான் முதலில் எல்லையைத் தாண்டினர் என்றும் அவர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.