

புதுடெல்லி: நடப்பு 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், ஆட்டத்தின் போது நடுவர்களால் எடுக்கப்படும் சில முடிவுகள் தமக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகப் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது வலைப்பதிவில் அவர் எழுதியுள்ளதாவது: “2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் காரணமாக எனது அன்றாட நேர அட்டவணையும், தூக்கமும் முழுமையாக மாறியுள்ளன. விசித்திரமான நேரங்களில் போட்டிகள் ஒளிபரப்பப்படுவதால் ஒட்டுமொத்த நாளும் சோர்வடைந்தாலும், நாம் தொடர்ந்து போட்டிகளைக் கண்டு, ரசித்து, சில நேரங்களில் வருத்தப்படவும் செய்கிறோம்.
குறிப்பாக, ஆட்டத்தின் போது ஒரு அணிக்குச் சாதகமாகவும், மற்றொரு அணிக்கு பாதகமாகவும் நடுவர்களால் எடுக்கப்படும் சமமற்ற, தவறான முடிவுகள் எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. அதேவேளையில், உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவார்கள் என்று யாரும் நினைத்துப் பார்க்காத சிறிய நாடுகள் அசத்தலாகப் போராடி அங்கீகாரம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகளவில் புகழ்பெற்ற பல முன்னணி நாடுகள் இந்தத் தொடரில் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்து வெளியேறியது வியப்பளிக்கிறது. சிறந்த அணியே வெல்லட்டும் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், இறுதி முடிவுகள் வெளிவரும் வரை எது சிறந்த அணி என்பது யாருக்கும் தெரிவதில்லை. கிளப் போட்டிகளில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடும் வீரர்கள், தங்களின் நாட்டுக்காக விளையாடும் போது கிளப் பகையை மறந்து ஒன்றாக இணைவது பாராட்டுக்குரியது.
இதனை இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடலாம்; அங்கும் வெவ்வேறு அணிகளுக்காக மோதிக்கொள்ளும் வீரர்கள், தேசிய அணிக்குத் தேர்வாகும் போது ஒரே குழுவாக மாறுகின்றனர். இதற்கு உன்னதமான குணநலன் தேவை. தற்போதைய இளைய தலைமுறையினர் உலகம் மிக வேகமாக நேர்மறையான வளர்ச்சியை நோக்கி நகர்வதைக் காணும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார்கள்" இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.