

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். அவரும் அவர் மனைவி ட்விங்கிள் கன்னாவும் தங்களது 25 வது திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு, திங்கள்கிழமை இரவு மும்பை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து ஜுஹு பகுதியில் உள்ள தங்கள் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனர். அக் ஷய் குமாரும் அவர் மனைவியும் முன்னால் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பு வாகனம் பின்னால் வந்தது.
சில்வர் பீச் கஃபே அருகே சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று ஆட்டோ மீது மோதிவிட்டு அக் ஷய் குமாரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதியது. மேலும் அது அகஷய் குமார் கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும் அதிலிருந்த பயணியும் படுகாயம் அடைந்தனர். ஆட்டோவும் காரும் முற்றிலும் சேதமடைந்தன.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஆட்டோ டிரைவரையும் அதில் பயணித்தவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நடிகர் அக் ஷ்ய் குமாரும் காரில் இருந்து இறங்கி காயமடைந்தவர்களை மீட்க உதவினார். இவ்விபத்தில் அக் ஷய்குமாருக்கும் அவர் மனைவிக்கும் காயம் ஏற்படவில்லை. போலீஸார் காரை வேகமாக ஓட்டி வந்த பென்ஸ் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.