

நடிகை டாப்ஸி
நடிகை டாப்ஸி, திரையுலகில் சந்தித்த சில மோசமான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், கதாநாயகனின் மனைவிக்குத் தன்னைப் பிடிக்காததால் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு திரைப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தேன். திடீரென அந்தப் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். கதாநாயகன்தான் என்னை மாற்றிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பது கடவுளுக்குத்தான் தெரியும். இதற்குப் பல காரணங்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். அவருக்குப் பாதுகாப் பின்மை உணர்வு இருந்திருக்கலாம்; அல்லது தனக்கு நெருக்கமான வேறு ஒருவரை நடிக்க வைக்க விரும்பி இருக்கலாம்.
ஆனால் எனக்கு எந்த உறுதியான காரணமும் சொல்லப்படவில்லை. பிறகு ஹீரோவின் மனைவிக்கு என்னைப் பிடிக்காததால்தான் நான் நீக்கப்பட்டேன் என்று சொன்னார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திரைத்துறைக்கு நான் புதிதாக வந்திருந்த காலத்தில் சில காட்சிகள், படப்பிடிப்பின்போது இயல்பானதாகத் தோன்றியது.
ஆனால் படம் வெளியான போது அவை தேவையற்ற அளவுக்கு பாலியல் பார்வையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை உணர்ந்தேன். ஒரு பெண்ணை திரைப்படத்தில் கவர்ச்சியாகக் காட்டுவது வேறு; அவரை தேவையற்ற அளவுக்குப் பாலியல் பார்வையில் காட்டுவது வேறு. பிறகு அது பற்றி தெரிந்துகொண்டு கவனமுடன் நடிக்கத் தொடங்கினேன்” என்றார்.