

பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை ‘ராமாயணா’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் அனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் 2 பாகமாக உருவாகி உள்ளது. ஹாலிவுட்டில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் நிறுவனத்தை நடத்தி வரும் நமித் மல்ஹோத்ரா, தனது பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் இதை தயாரிக்கிறார். நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
இதன்முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் ஜூலை 24-ல் வெளியாக இருக்கிறது. அதற்கு முன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், முதல் முறையாக டெல்லியில் நடந்த விழாவில் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது.
அப்போது தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறும்போது, “எங்களது நிறுவனம் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் 8 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள நம்முடைய கலைஞர்கள், நம்முடைய திறமை, ஆர்வம் ஆகியவை உலகிலேயே சிறந்தவை என்பதால் தான் இது சாத்தியமானது. ஆனால் அதற்கான அங்கீகாரம் நமக்கு கிடைக்கவில்லை.
இந்தியாவும், இந்தியாவின் திரைப்படத் துறையும் ஹாலிவுட்டில் இருந்து தூரத்தில் இருக்கிறது. எனவே, நம்மிடம் இருக்கும், நமக்குச் சொந்தமான, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு கதையை ஏன் உலகுக்குச்சொல்லக் கூடாது என்று நினைத்தேன். அதற்கு ராமாயணத்தை தவிர வேறு எந்த கதையும் நினைவுக்கு வரவில்லை.
ராமாயணம் உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. அதன் பெருமை, அது சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளில் உள்ளது. ஏற்கெனவே அது உலக மக்களிடம் புகழ்பெற்ற காவியம். ராமாயணத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்லாமல், அதன் உணர்வுகள், மனிதாபிமானம் மற்றும் காலத்தால் அழியாத ஆன்மா ஆகியவற்றையும் இந்தத் திரைப்படம் மூலம் பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
சாய் பல்லவி கூறும்போது, “சீதையின் கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தக் கதா பாத்திரத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. சீதையாக நடிக்க தினமும் தியானம் செய்தேன். சில நேரங்களில், சீதையை நினைத்து, ‘நீங்கள் என்னுள் இருந்து நடியுங்கள்; இந்தப் படத்துக்குத் தேவையானது எதுவோ அது என்னுள் இருந்து வெளிப்படட்டும்’ என்று பிரார்த்தனை செய்தேன்” என்றார். நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், ஷோபனா, விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.