

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘தேவரா’ படத்தை அடுத்து ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் மது பழக்கம் பற்றி பேசியிருந்தார். மன அழுத்தம் நிறைந்த ஒரு காலகட்டத்தில் மது பழக்கம் இருந்ததாக அவர் பேசியிருந்தார்.
இதையடுத்து அவர் மதுவுக்கு அடிமையாக இருந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவரது கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக ஜான்வி கபூர் தரப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜான்வி கபூர் மது பழக்கத்துக்கு ஆளானவர் அல்ல. மது பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் பராமரிப்பாளர் மற்றும் ஆதரவாளராக மட்டுமே பங்கேற்றார். அவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாகச் செய்திகளைப் பரப்புவது அவரது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், போதைக்கு எதிராகப் போராடுபவர்களை அவமதிக்கும் செயல்” என்று கூறப்பட்டுள்ளது.