

நடிகை ஹூமா குரேஷி
இந்தி நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘பேபி டூ டை டூ’ என்ற இந்திப் படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் அவர் காதுகேட்காத, வாய்பேச முடியாத ஒப்பந்தக் கொலையாளியாக நடித்திருக்கிறார்.
இப்படம் பற்றி பேசிய அவர், “இப்படத்தின் ‘பேபி’ கதாபாத்திரம் சாதாரண தோற்றம் கொண்ட, மும்பை புறநகர் ரயிலில் பயணிக்கும் ஒரு பெண்ணைப் போலவே இருக்கும். அதுவே அந்தக் கதாபாத்திரத்தைத் தனித்துவமாக்குகிறது. பெண்களை இயல்பானவர்களாகவும், வலிமையானவர்களாகவும் சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் அதிகம் எழுதப்பட வேண்டும்.
பெண் கொலையாளிகள் எப்போதும் ஏன் இறுக்கமான தோல் ஆடைகள், உயரமான ஹீல்ஸ் அணிந்து, கவர்ச்சியாகவே தோன்ற வேண்டும் ? அது யதார்த்தமல்ல, பெண்களை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மனப்பான்மையில் இருந்து தான் அந்தச் சித்தரிப்பு உருவாகிறது. சக்தி வாய்ந்தவர்களாகக் காட்டப்படுவதற்குப் பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை இயல்பானவர்களாகவே காட்டலாம்” என்றார்.