

சென்னை: சினிமாவில் நடிக்க போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் எனக் கூறி சின்னத்திரை நடிகையை ஆபாசமாக படம் எடுக்க முயன்ற இரு பெண்கள், சினிமா தயாரிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.
சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை பவானி(31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை, சினிமா தயாரிப்பாளர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, தான் ஒரு படம் தயாரிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தில் உங்களை நடிக்க வைக்க உள்ளதால் போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதற்கு நடிகையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, சாலிகிராமம் பகுதியில் உள்ள விடுதிக்கு வருமாறு படத்தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை பவானி அந்த விடுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்த ஒரு பெண், நடிகையை 3 போட்டோ எடுத்துவிட்டு, கதையில் சாமி வேடம் போன்ற காட்சி வருவதால், உங்கள் உடம்பில் எந்த காயமோ, தழும்போ இருக்கக் கூடாது.
எனவே, உங்கள் கண்களை கையால் மூடிக்கொண்டு ஆடைகளை கழட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பவானி, நான் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை எனக் கூறி வெளியே வர முயன்றபோது சினிமா தயாரிப்பாளர் மற்றும் 2 பெண்களும் தடுத்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த நடிகை, இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, பெருங்குடியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நந்தி ராமநாதன்(65), தரமணியைச் சேர்ந்த இந்திராணி(40), விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கார்த்திகா(35) ஆகியோரைக் கைது செய்தனர்.
3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் தங்கி இருந்த 7 வயது சிறுமியை அடையாறு பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.