

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்பட பலர் நடித்த படம்,‘ஜவான்’. அனிருத் இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 2024ம் ஆண்டு வெளியான இப்படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார் அட்லி. இப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஷாருக்கான் இப்போது சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘கிங்’ படத்தில் நடித்து வருகிறார். அட்லி, ‘ராக்கா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படங்களை முடித்த பிறகு அட்லியும், ஷாருக்கானும் மீண்டும் இணைகின்றனர். அது ‘ஜவான்’ படத்தின் 2ம் பாகம் என்கிறார்கள்.
“‘ஜவான் 2’ படத்துக்கான கதை மற்றும் திரைக்கதை கடந்த சில காலமாகவே உருவாக்கப்பட்டு வந்தன. சில வாரங்களுக்கு முன்பு, திரைக்கதை இறுதி செய்யப்பட்டது. ‘கிங்’ படத்தை முடித்துவிட்டு, ஷாருக்கான் இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்குவார்” என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். அதே போல இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க அட்லி திட்டமிட்டுள்ளார். எனினும் இப்படம் பற்றி அட்லியோ, ஷாருக்கானோ உறுதிப்படுத்தவில்லை.