இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்

இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்
Updated on
1 min read

'ஜெர்சி' படத்தின் இந்தி ரீமேக் மூலம், இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் அனிருத்.

2019-ம் ஆண்டு கவுதம் இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஜெர்சி'. இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இதர மொழி ரீமேக் உரிமைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தப் படத்தில் அனிருத்தின் இசை பெரிய அளவில் பேசப்பட்டது.

இதன் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நாயகனாக நடித்து வருகிறார். மிருணாள் தாகூர், பங்கஜ் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தையும் கவுதமே இயக்கியுள்ளார். இந்தப் படத்தை அல்லு அரவிந்த், நாக வம்சி, அமன் கில், தில் ராஜு ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு முதலில் சச்சட் மற்றும் பரம்பாரா ஆகியோர் இசையமைப்பதாக இருந்தது. தற்போது அவர்களுக்கு பதிலாக தெலுங்கில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அனிருத்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்னதாக பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளியான 'டேவிட்' இந்திப் படத்துக்கு ஒரே ஒரு பாடலை மட்டுமே உருவாக்கிக் கொடுத்திருந்தார் அனிருத். 'ஜெர்சி' இந்தி ரீமேக்கின் மூலமாக முழுமையான ஒரு படத்துக்கு இசையமைத்து அனிருத் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in