கரோனா தொற்று அதிகரிப்பு: 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைப்பு

கரோனா தொற்று அதிகரிப்பு: 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைப்பு
Updated on
1 min read

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 'சூர்யவன்ஷி' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. முக்கியமாக இதில் 'சிங்கம்' அஜய் தேவ்கன் மற்றும் 'சிம்பா' ரன்வீர் சிங் என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஓராண்டாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராதக் காரணத்தால், 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் 'சூர்யவன்ஷி' வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள். ஏப்ரல் 30-ம் தேதி 'சூர்யவன்ஷி' வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது படக்குழு. ரோஹித் ஷெட்டியின் இந்த கடினமான முடிவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒராண்டுக்கும் மேலாக வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள சூழலில் ஓடிடி வெளியீட்டுக்கு 'சூர்யவன்ஷி' படக்குழுவினர் செல்ல வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in