'துருவங்கள் பதினாறு' இந்தி ரீமேக்: வருண் தவான் ஒப்பந்தம்

'துருவங்கள் பதினாறு' இந்தி ரீமேக்: வருண் தவான் ஒப்பந்தம்
Updated on
1 min read

'துருவங்கள் பதினாறு' படத்தின் இந்தி ரீமேக்கில் ரகுமான் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'துருவங்கள் பதினாறு'. 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் எனப் பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் தொடங்கி பல்வேறு முன்னணித் திரையுலக பிரபலங்கள் இந்தப் படக்குழுவினரைப் பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து ரீமேக் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. பலமுறை 'துருவங்கள் பதினாறு' ரீமேக் குறித்த செய்திகள் வெளியானாலும், எதுவுமே உறுதியாகாமல் இருந்தது.

தற்போது 'துருவங்கள் பதினாறு' படத்தின் இந்தி ரீமேக் தொடங்கப்படவுள்ளது. சாஜித் நாடியவாலா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு 'சங்கி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரகுமான் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கவுள்ளார். ஒற்றைக் காலில் அடிபட்டவராக நடிக்க வேண்டும் என்பதால், இதற்காக விஷேச பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார்.

தற்போது இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வருண் தவான். அதனை முடித்துவிட்டு 'துருவங்கள் பதினாறு' இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in