இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று: படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று: படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்
Updated on
1 min read

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குபாய் கதியாவாதி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது 'கங்குபாய் கதியாவாதி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி தனது அலுவலகத்திலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் இன்று நடிகர் ரன்பீர் கபூருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரன்பீருடன் ‘ப்ரம்மாஸ்திரா’ படத்திலும், சஞ்சய் லீலா பன்சாலியின் 'கங்குபாய் கதியாவாதி' படத்திலும் ஆலியா பட் நடித்து வருவதால் அவரும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in