'அருவி' இந்தி ரீமேக்கில் 'தங்கல்' நடிகை ஃபாத்திமா

'அருவி' இந்தி ரீமேக்கில் 'தங்கல்' நடிகை ஃபாத்திமா
Updated on
1 min read

2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 'அருவி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ஃபாத்திமா சனா ஷேக் நடிக்கவிருக்கிறார்.

'ஷூல்' என்கிற திரைப்படத்தை இயக்கிய நிவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடித்திருந்த திரைப்படம் 'அருவி'. விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் இது. முற்போக்குவாதியான ஒரு பெண்ணின் வாழ்க்கயைச் சொல்லும் கதை இது.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ஃபாத்திமா, "இந்த அற்புதமான திரைப்படத்தை நிவாஸ் இயக்க, அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்டும், ஃபெய்த் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த பயணத்தைத் தொடங்க ஆர்வத்துடன் இருக்கிறேன். அருவி கதாபாத்திரத்தின் ஆழத்துக்குச் செல்வதை எதிர்நோக்கியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

"நகைச்சுவை அதே சமயம் தீவிரமான திரைப்படமான அருவி, தார்மீக கோபத்தை உண்டாக்கும், பெண்ணிய, சமூக நையாண்டியாகவும் இருந்தது. முதலில் பார்த்த போதே எங்களை ஆச்சரியப்படுத்தியது. வழக்கத்துக்கு மாறாக கதை சொல்லப்பட்ட விதம், ஒரு த்ரில்லருக்கும் நகைச்சுவைக்கும் இடையேயான சமநிலை சரியாகக் கையாளப்பட்டிருந்தது" என்று படத்தின் தயாரிப்பாளர் சமீர் நாயர் கூறியுள்ளார்.

அருவி திரைப்படத்தின் அசல் வடிவத்துக்கு இணையாக ரீமேக்கை உருவாக்குவதில் அதிக சவால்கள் இருப்பதாகவும், ஆனால் தனது அணி அந்த மாயத்தை மீண்டும் உருவாக்கும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் ஃபெய்த் ஃபிலிமிஸின் விகி ராஜானி கூறியுள்ளார். இந்த ரீமேக் பதிப்பை இயக்குவதில் பெருமை என்று நிவாஸ் கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்தப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in