

ஸ்ரீதேவியின் இடத்தை யாராலும் பிடிக்க இயலாது என்று பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா. 90களில் தொடங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழிலும் ‘இந்தியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘புலி’ உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார்.
மனிஷ் மல்ஹோத்ரா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''சந்தேகத்திற்கு இடமின்றி எனக்கு எப்போதும் பிடித்த நடிகை ஸ்ரீதேவி மட்டுமே. திரையுலகில் அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இதன் அர்த்தம் எனக்கு மற்ற நடிகைகளைப் பிடிக்காது என்பதல்ல. எனக்கு ஷபானா ஆஸ்மி, ரேகா ஆகியோருடன் பணிபுரிவது மிகவும் பிடித்தமானது. இருப்பினும் ஸ்ரீதேவியுடன் ஒரு விசேஷமான நட்பு எனக்கு இருந்தது.
மாடலாக இருந்த நான் சினிமாவுக்குள் நுழையக் காரணம் திரைத்துறையின் மீது எனக்கிருந்த காதல். நான் ஏதேனும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று எண்ணினேன். திரைப்படங்களில் ஆடைகள் காண்பிக்கப்படுவதில் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினேன். இது ஒரு இடைவிடாத பயணம். 30 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறேன்''.
இவ்வாறு மனிஷ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
தற்போது ‘மிந்த்ரா ஃபேஷன் சூப்பர் ஸ்டார்’ என்னும் ஆன்லைன் ஃபேஷன் ரியாலிட்டி நிகழ்ச்சியில், மனிஷ் மல்ஹோத்ரா நடுவராகப் பங்கு பெறுகிறார்.