ஊரடங்கால் வேலையிழப்பு: வீடியோகிராபர்களுக்கு ரோஹித் ஷெட்டி பண உதவி

ஊரடங்கால் வேலையிழப்பு: வீடியோகிராபர்களுக்கு ரோஹித் ஷெட்டி பண உதவி
Updated on
1 min read

ஊரடங்கால் வேலையிழந்துள்ள மீடியா வீடியோகிராபர்களுக்கு இயக்குநர் ரோஹித் ஷெட்டி பண உதவி செய்துள்ளார்.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதைச் சார்ந்து இருந்த தினக்கூலிப் பணியாளர்கள் பலர் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு பிரபலங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் உதவி செய்துள்ளனர். தற்போது இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் உதவ முன்வந்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ரோஹித் ஷெட்டி, 'கத்ரோன் கே கிலாடி' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் விசேஷப் பகுதிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சி மூலம் தனக்குக் கிடைத்திருக்கும் வருவாயில் ஒரு பகுதியை, துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைக் கலைஞர்கள், லைட்மேன் உள்ளிட்ட பலருக்கும் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்குக்கே அனுப்பி வருகிறார்.

அந்த வகையில் ஊரடங்கால் வேலையிழந்துள்ள மீடியா வீடியோகிராபர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் வங்கிக் கணக்குக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பியுள்ளார் ரோஹித் ஷெட்டி. அவரின் இந்த உதவிக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் அடுத்ததாக 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கத்ரீனா கைஃப், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in