

அமலா பால் நடிப்பில் வெளியான 'ஆடை' படத்தின் இந்தி ரீமேக்கில் ஷ்ரத்தா கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
2019-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி வெளியான படம் 'ஆடை'. ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விவேக் பிரசன்னா, வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
மேலும், இந்தப் படம் தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்றன. ஏனென்றால், இந்தப் படத்தில் அமலாபால் பிரதான காட்சிகள் பலவற்றில் ஆடையின்றி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான சமயத்திலிருந்து இந்தி ரீமேக் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
முதலில் அமலா பால் கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு கங்கணா மறுப்பு தெரிவித்தார். அப்போது 'ஆடை' இந்தி ரீமேக் உரிமையை வைத்திருக்கும் அருண் பாண்டியனும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தற்போது 'ஆடை' இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமலா பால் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.