

ஸ்ரீதேவி இல்லாமல் எங்களுடைய மகிழ்ச்சி முழுமையடையவில்லை என்று கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் பிறந்த நாள் இன்று. இதனால் அவரோடு நடித்தவர்கள், பழகியவர்கள் என அனைவருமே ஸ்ரீதேவியின் நினைவலைகளை தங்களுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான 'குஞ்சன் சக்ஸேனா' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு போனி கபூர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அன்பே, நீ எங்களை விட்டுப் பிரிந்த இந்த 900 நாட்களும் நீ இல்லாத குறையை ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தேன். ஆனால் இன்று இன்னும் அதிகமாக உணர்கிறேன், ஏனென்றால் குஞ்சன் படத்துக்காக ஜானுவுக்குக் (ஜான்வி) கிடைத்திருக்கும் பாராட்டுகளைப் பார்த்து உன் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. நீ எங்களுடன் இங்கு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீ இல்லாமல் எங்கள் மகிழ்ச்சி முழுமையடையவில்லை. என் வாழ்க்கையின் காதலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்"
இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.