சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டும்: புற்றுநோயை வென்ற மனிஷா கொய்ராலா, யுவராஜ் சிங் வாழ்த்து

சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டும்: புற்றுநோயை வென்ற மனிஷா கொய்ராலா, யுவராஜ் சிங் வாழ்த்து
Updated on
1 min read

ஆகஸ்ட் 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்பு உடல்நிலை சீராகி ஆகஸ்ட் 10-ம் தேதி சஞ்சய் தத் வீடு திரும்பினார்.

நேற்று (ஆகஸ்ட் 11) மாலை திடீரென்று மருத்துவக் காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்தார். அடுத்த சில மணித்துளிகளில் சஞ்சய் தத்துக்கு 3-ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றும், இதன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் சஞ்சய் தத் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் புற்றுநோயிலிருந்து குணமடைந்த நடிகை மனிஷா கொய்ராலா மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இருவரும் சஞ்சய் தத் விரைவில் புற்றுநோயை வென்று வீடு திரும்ப வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மனிஷா கொய்ராலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''உங்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு பற்றிக் கேள்விப்பட்டது மிகுந்து வலியை ஏற்படுத்தியுள்ளது சஞ்சு பாபா. ஆனால், நீங்கள் ஒரு உறுதியான நபர். உங்கள் வாழ்க்கையில் ஏராளமான இன்னல்களைக் கடந்து வந்துள்ளீர்கள். இதுவும் உங்களுக்கு இன்னொரு வெற்றியாக அமையும். நீங்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்''.

இவ்வாறு மனிஷா கூறியுள்ளார்.

சஞ்சய் தத்துடன் இணைந்து ‘யால்கார்’, ‘சனம்’, ‘கர்டூஸ்’, ‘பாகி’ உள்ளிட்ட படங்களில் மனிஷா கொய்ராலா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''நீங்கள் எப்போதும் ஒரு போராளியாகவே இருந்துள்ளீர்கள் சஞ்சய் தத். இனியும் அப்படியே இருப்பீர்கள். இந்த நோய் ஏற்படுத்தும் வலியை நான் அறிவேன். ஆனால், நீங்கள் வலிமையானவர் என்பதையும் நான் அறிவேன். இந்தக் கடினமான கட்டத்தை நீங்கள் கடப்பீர்கள். நீங்கள் விரைவில் குணமடைய என்னுடைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்''.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in