

நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் இர்ஃபான் கான் ஆகியோரின் மரணம் குறித்து அக்கறையற்ற முறையில் நையாண்டி செய்த பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவர் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருப்பவர் லியாகத் ஹுஸைன். சமீபத்தில் 'ஜீவி பாகிஸ்தான்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், பாகிஸ்தான் நடிகர் அத்னான் சித்திக் என்பவரை வீடியோ கால் மூலமாக லியாகத் பேட்டி கண்டுள்ளார்.
அப்போது, ராணி முகர்ஜி, பிபாஷா பாசு ஆகியோரின் உயிரை அத்னான் சித்திக் காப்பாற்றிவிட்டதாக லியாகத் கூறினார். அது எப்படி என அத்னான் கேட்டபோது பதில் கூறிய லியாகத், "நீங்கள் ஸ்ரீதேவியோடு 'மாம்' படத்தில் நடித்தீர்கள், அவர் இறந்துவிட்டார். இர்ஃபான் கானுடன் நடித்தீர்கள். அவரும் இறந்துவிட்டார். 'மர்தானி 2', 'ஜிஸ்ம் 2' ஆகிய பட வாய்ப்புகள் வந்து அதை மறுத்துவிட்டீர்கள். எனவே அந்தப் படங்களின் நடிகர்கள் உங்களுக்குக் கடமைபட்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் இதைச் சொல்லும்போதே அத்னான் என்ன சொல்வது என்று தெரியாமல் அசவுகரியமாக உணர்ந்தார். தொடர்ந்து லியாகத்தின் நையாண்டிக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தற்போது லியாகத் மன்னிப்பு கோரி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "சில நேரங்களில் உங்கள் வார்த்தைகள் மீது கட்டுப்பாட்டை இழப்பீர்கள். நேரலையில் இது நடக்கும். அந்த நேரத்தில் நான் பேசியது தவறாகத் தெரியவில்லை. பின்னர் நான் நினைத்துப் பார்த்தபோது நான் பேசியது சரியில்லை என்பது புரிந்தது. எனவே, நான் என் வார்த்தைகளுக்காக வருந்துகிறேன். மனிதம் என்பதைக் கருத்தில் கொண்டு நான் அப்படி நையாண்டி செய்திருக்கக் கூடாது. நான் தவறு செய்துவிட்டேன்" என்று லியாகத் பேசியுள்ளார்.
நடிகர் அத்னானும் லியாகத்தின் நையாண்டி தேவையற்றது என்றும், இறந்தவர்கள் பற்றிப் பேசுவது ரசனையற்ற, இரக்கமற்ற செயல் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.