நாம் இந்த பூமியின் விருந்தினர்களே; எஜமானர்கள் அல்ல: ஷ்ரத்தா கபூர்

நாம் இந்த பூமியின் விருந்தினர்களே; எஜமானர்கள் அல்ல: ஷ்ரத்தா கபூர்
Updated on
1 min read

நாம் இந்த பூமியின் விருந்தினர்களே, எஜமானர்கள் அல்ல என்று ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பலரும் இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் யாவும் ஊரடங்கு நீட்டிப்பு சரிதான், நலிந்த தொழிலாளர்களுக்கான உதவிகள் குறித்த அறிவிப்பு எங்கே என்று விமர்சனம் செய்து வருகின்றன.

பிரதமர் மோடியின் ஊரடங்கு நீட்டிப்புக்கு, பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முன்னணி நாயகியான ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"தனிமை உங்களுக்குச் சோர்வைத் தருகிறதா?

கோவிட்-19, உலகையே தனிமையில் இருக்கச் செய்துள்ள நேரத்தில், நாம் அனைவரும் மன அழுத்தம், பதற்றம் என தனிமையின் பாதிப்பை உணர்ந்துள்ளோம். மிருகங்களும் அதேபோன்ற உணர்ச்சிகளை உணரும்.

மனிதர்களாக, நாம் ஒரு சூழலை அனுபவிக்கும் வரை அதே சூழலில் இருக்கும் மற்றவர்களின் நிலையைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஆனால் நாம் இப்போது சிறைப்படுத்தப்படுவது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டோம். அந்த பச்சாதாபத்தை, இந்த பூமியை நாம் பங்கு போட்டுக் கொண்டிருக்கும் மற்ற உயிர்களிடத்திலும் காட்டுவோம்.

லட்சக்கணக்கான மிருகங்கள் அதன் வாழ்க்கை முழுவதும் தனிமையில் இருக்கின்றன. தனிமையில் இந்த மிருகங்கள் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளுதல் போன்ற கவலைக்குரிய விஷயங்களைச் செய்து கொள்கின்றன. மனநலம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல.

எனவே, தனிமை உங்களுக்குச் சோர்வைத் தருகிறதா? இந்த மிருகங்கள் வாழ்க்கை முழுவதும் தனிமையில் இருக்கின்றன. எந்த உயிரினமும் சிறைபட்டு வாழக்கூடாது. நாம் இந்த பூமியின் விருந்தினர்களே. எஜமானர்கள் அல்ல".

இவ்வாறு ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in