

'மிஸ்டர் இந்தியா' ரீமேக் தொடர்பாக சேகர் கபூர் தெரிவித்த கருத்துகளுக்கு ஜாவத் அக்தர் பதிலடிக் கொடுத்துள்ளார்.
'மிஸ்டர் இந்தியா' என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. சேகர் கபூர் இயக்கத்தில் அனில் கபூர், ஸ்ரீதேவி, அம்ரீஷ் பூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் 'மிஸ்டர் இந்தியா'. இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும். இதனை போனி கபூர் தயாரித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் அலி அப்பாஸ் ஷாஃபர், 'மிஸ்டர் இந்தியா' படத்தின் தொடர்ச்சியாக 3 பாகங்கள் எழுதி வருவதாகவும், இதற்காக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை என்று அனில் கபூரின் மகள் சோனம் கபூர் தனது ட்விட்டர் பதிவில் கடுமையாகச் சாடினார்.
தற்போது 'மிஸ்டர் இந்தியா' படத்தின் இயக்குநரான சேகர் கபூர், தனது ட்விட்டர் பதிவில் "மிஸ்டர் இண்டியா 2 பற்றி யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை, அதைப் பற்றிக் குறிப்பிடவும் இல்லை. பெரிய வசூல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த தலைப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.
படத்தை உருவாக்கியவர்களிடமிருந்து அனுமதி பெறாமல் அந்த படத்தின் கதாபாத்திரங்கள், கதையைப் பயன்படுத்த முடியாது. 'மிஸ்டர் இந்தியா’ ரீமேக் பற்றி யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை. என்னிடம் சொல்ல வேண்டுமென்று கூட யாருக்கும் தோன்றவில்லை. எனது கேள்வி என்னவென்றால், ஒரு இயக்குநரின் வெற்றி பெற்ற படத்தைச் சார்ந்து ஒரு படத்தை ரீமேக் செய்கிறீர்கள் என்றால், அந்த அசல் இயக்குநருக்கு, அவர் உருவாக்கிய விஷயத்தின் மீது உரிமை உள்ளதா இல்லையா?" என்று தெரிவித்துள்ளார் சேகர் கபூர்.
சேகர் கபூரின் இந்தப் பதிவுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் முன்னணி பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவத் அக்தர் தனது ட்விட்டர் பதிவில் "சேகர் அவர்களே, கதை, சூழல், காட்சிகள், கதாபாத்திரங்கள், வசனம், பாடல்வரிகள், ஏன் தலைப்பு கூட உங்களுடையது கிடையாது. நான் தான் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். ஆம், நீங்கள் அதைச் சரியாகத் திரைக்குக் கொண்டு வந்தீர்கள். ஆனால் என்னை விட எப்படி நீங்கள் அதிக உரிமையை அந்த படம் மீது கோர முடியும். படம் உங்கள் யோசனை அல்ல, உங்கள் கனவு அல்ல." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 'மிஸ்டர் இந்தியா' குழுவினருக்குள்ளேயே பிரச்சினை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.