Published : 11 Sep 2019 02:46 PM
Last Updated : 11 Sep 2019 02:46 PM

சல்மான்கானின் 'தபங் 3' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் 'தபங் 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

அலி அப்பாஸ் ஷாஃபர் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாரத்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார் சல்மான் கான்.

'பாரத்' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் உருவான 'தபங் 3' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சல்மான் கான். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு பஞ்சாபில் தொடங்கியது. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதன் பெரும்பாலான காட்சிகளை முடித்து, இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. சல்மான் கான் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சிறிய அளவிலான வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு. தமிழிலும் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் சல்மான் கான் தமிழில் பேசும் 'ஜல்லிக்கட்டுக் காளை ரெடி' என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

டிசம்பர் 20-ம் தேதி தங்களுடைய தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்துடன் இணைத்து 'தபங் 3' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x