ஷாருக்கானை ஓய்வு பெற சொன்ன ரசிகர்!

ஷாருக்கானை ஓய்வு பெற சொன்ன ரசிகர்!
Updated on
1 min read

இந்தி நடிகர் ஷாருக்கான், இப்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் சண்டைக்காட்சி படப்பிடிப்பு மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்த போது, எதிர்பாராத விதமாக ஷாருக்கானுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காகத் தனது குழுவுடன் அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து சமீபத்தில் மும்பை திரும்பினார்.

இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் ஷாருக்கான் பதிலளித்தார். நடிப்புக்கும் சிறந்த நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்ற அவரிடம், “உங்கள் தோள்பட்டை காயம் எப்படி இருக்கிறது?” என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு “குணமாகி வருகிறது” என்று தெரிவித்தார்.

பின்னர், “இப்போது உங்களுக்கு வயதாகிவிட்டது. மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக, ஓய்வு எடுப்பது பற்றி யோசியுங்கள்” என்று ஒரு ரசிகர் கிண்டலாகச் சொன்னார்.

இதற்கு கூலாக பதிலளித்த ஷாருக், “சகோதரா, உங்கள் குழந்தைத்தனமான கேள்விகள் முடிந்ததும், பயனுள்ள ஒன்றைக் கேளுங்கள். அதுவரை, நீங்களே தற்காலிக ஓய்வு எடுப்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்” என்றார். இந்தப் பதிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in