‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகிய விவகாரம்: தீபிகா படுகோனுக்கு மணிரத்னம் ஆதரவு!

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகிய விவகாரம்: தீபிகா படுகோனுக்கு மணிரத்னம் ஆதரவு!
Updated on
1 min read

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகிய விவகாரத்தில் இயக்குநர் மணிரத்னம் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோன். அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தீபிகா படுகோன் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இதனையடுத்து அண்மையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தீபிகாவை மறைமுகமாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குநர் மணிரத்னம் தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ‘தக் லைஃப்’ படத்துக்காக கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, “அது ஒரு நியாயமான கோரிக்கை என்றே நான் நினைக்கிறேன். அதைக் கேட்கும் இடத்தில்அவர் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு திரைப்பட இயக்குநராக, இதனை கருத்தில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமற்ற விஷயம் அல்ல. ஒரு முழுமையான அடிப்படை தேவை. அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்” இவ்வாறு மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் தள பதிவில், “நான் ஒரு நடிகரிடம் கதையைச் சொல்லும்போது, 100 சதவீதம் நம்பிக்கையுடன் அதைச் சொல்கிறேன். எனக்கும் கதையைக் கேட்பவருக்கும் இடையே வெளிப்படையாக சொல்லப்படாத ஓர் உடன்பாடு ஏற்படுகிறது. ஆனால், உங்கள் செயலின் மூலம் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள். எனது கதையை நிரகாரித்தது மட்டுமின்றி ஓர் இளம் சக நடிகரை கீழே தள்ளிவிட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய பெண்ணியமா?

ஒரு திரைப்பட இயக்குநராக நான் என் கலைக்கு எனது பல ஆண்டுகால உழைப்பைச் செலுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை சினிமாவை உருவாக்குவது தான் எல்லாமே. அது உங்களுக்கு புரியவில்லை. எப்பவுமே புரியவும் புரியாது.

நீங்கள் இப்படி வேண்டுமானால் செய்து பாருங்கள்; அடுத்த முறை என்னுடைய முழுக் கதையையும் அம்பலப்படுத்துங்கள். அப்போது, நான் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாதவனாக இருப்பேன். நீங்கள் மோசமான வியாபார விளையாட்டை விளையாடியுள்ளீர்கள். எனக்கு இச்சூழலில் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ‘தோற்றுப்போன பூனை கோப ஆவேசத்தில் ஏதேனும் தூணைப் போய் பிராண்டிக் கொண்டிருக்குமாம்..” என்று சந்தீப் வாங்கா கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in