Last Updated : 29 Jun, 2024 06:35 PM

 

Published : 29 Jun 2024 06:35 PM
Last Updated : 29 Jun 2024 06:35 PM

‘ஃபைட்டர்’ முதல் ‘மஹராஜ்’ வரை: பாலிவுட் ஏற்றமும் இறக்கமும் - ஒரு பார்வை | First half of 2024

உண்மையில் பாலிவுட் திரையுலகம் ஷாருக்கானை இந்த ஆண்டு நிச்சயம் மிஸ் செய்யும் என்பதை அதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் நிலவரங்கள் உணர்த்துகின்றன. கரோனா பாதிப்பு, அதன் பிறகான ஓடிடியின் அதீத வளர்ச்சியால், மற்ற திரைத்துறைக்கூட ஓரளவு முன்னேற்றத்தை கண்டது. ஆனால் பாலிவுட் ‘டெத் பெட்’டில் இருந்தது. 2022 என்பது இந்தி சினிமாவுக்கு மோசமான காலம். அவர்கள் ‘பாக்ஸ் ஆஃபீஸ்’ மீட்பரைத் தேடிக்கொண்டிருந்தபோது வந்த நின்றார் ஷாருக்கான். கடந்த ஆண்டில் ‘பதான்’, ‘ஜவான்’ என முதல் 6 மாதத்தில் மட்டும் ரூ.3000 கோடி வசூலை ஈட்டி பாலிவுட்டை மீட்டுதந்தார். தமிழ் சினிமாவிலிருந்து சென்ற அட்லீக்கும் அதில் பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் பாலிவுட் நிலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

பிரச்சார பாலிவுட்: இந்தி திரையுலகம் பெரும்பாலும் தனது தொடக்கத்தை ‘தேசபக்தி’ கொண்ட படங்களில் இருந்து தான் ஆரம்பிக்கும். 2023-ல் ‘பதான்’. இந்த முறை ‘ஃபைட்டர்’. தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் நடந்த ஆண்டு என்பதால், வழக்கத்துக்கும் மாறாக வலதுசாரி கருத்தியலைத் தழுவிய பிரச்சார படங்களின் எண்ணிக்கை வடமாநில ரயில்களில் ஏறும் கூட்டத்தை விட அதிகமாகவே இருந்தது.

குறிப்பாக, ரன்தீப் ஹூடாவின் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’, யாமினி கவுதம், பிரியாமணியின் ‘ஆர்ட்டிகிள் 370’, ‘JNU: Jahangir national university’, ‘கேரளா ஸ்டோரி’ பட இயக்குநரின் ‘Bastar: The Naxal Story’, பங்கஜ் திரிபாதியின் ‘Main Atal Hoon’, இந்து - முஸ்லிம் பிரிவினை பேசும் ‘Aakhir Palaayan Kab Tak?’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகின. அதேபோல அடுத்து, ‘Accident or Conspiracy: Godhra’,‘The Sabarmati Report’ என மேலும் சில படங்கள் வரும் மாதங்களில் வெளியாக உள்ளன. இதில் தன்னுடைய ‘சாவர்க்கர்’ படம் ஓடவில்லை என நொந்துகொண்டார் ரன்தீப் ஹூடா. ‘பாலா இருந்தா தானே பொங்கும், பச்ச தண்ணி எப்படி பொங்கும்’ என நெட்டிசன்கள் அதற்கு கருத்து தெரிவித்தது வேறு கதை.

சர்ப்ரைஸ் ஹிட்: ஆமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான ‘லாபத்தா லேடீஸ்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திருமண சடங்களுகளால் என்ற பெயரில் நடக்கும் கொடுமையையும், பெண் அடிமைத்தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் எள்ளி நகையாடிய படைப்பு பாலிவுட்டின் அரிதான ஆச்சரியம். அதேபோல அஜய்தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடிப்பில் வெளியான ‘ஷைத்தான்’ சூப்பர் நேச்சூரல் த்ரில்லர் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இதனால் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடியை வசூலித்தது.

தபு, கரீனா கபூர், கீர்த்தி சனோன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த ‘கிரியூ’ (Crew) சைலண்ட் வெற்றியை பதிவு செய்தது. பாக்ஸ் ஆஃபீஸில் ‘ஆர்ட்டிகள் 370’ வசூல் அடிப்படையில் வரவேற்பு தான். இதை தவிர்த்து, ஸ்போர்ட்ஸ் ட்ராமா - பயோபிக் ஜானர்களில் இந்த அரையாண்டில் பாலிவுட் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

உதாரணமாக, அஜய் தேவ்கன்னின் ‘மைதான்’, கார்த்திக் ஆர்யனின் ‘சந்து சாம்பியன்’, ராஜ்குமார் ராவ், ஜோதிகாவின் ‘ஸ்ரீகாந்த்’. இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அதேபோல இம்தியாஸ் அலியின் ‘அமர் சிங் சம்கிலா’ பயோபிக் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகி பாராட்டைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியாகியிருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்திருந்தனர்.

தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கும் ஆமீர்கான் மகன் ஜூனைத் கானின் ‘மஹராஜ்’ ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இருப்பினும் அதன் சோர்ந்த திரைக்கதை மைனஸ். முதல் 6 மாதத்தில் ஆமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ், மகன் ஜூனைத் கான் படங்கள் அதன் முற்போக்குதன்மையால் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன. ஆண்டு இறுதியில் ஆமீர்கான் தன்னுடைய படம் மூலம் என்ட்ரி கொடுக்கலாம்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்: ஆண்டு தொடக்கத்திலிருந்தே பாலிவுட்டுக்கு ஏமாற்றம் தான். விஜய் சேதுபதி, கரீனா கபூர் என்ற முன்னணி நடிகர்களின் கூட்டணியில் இந்தி - தமிழில் வெளியான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.25 கோடிக்கும் அதிகமாகவே வசூல் ஈட்டியது. பங்கஜ் திரிபாதி நடித்த வாஜ்பாயின் பயோபிக் படமான ‘Main Atal Hoon’ போஸ்டர் மற்றும் பங்கஜ் திரிபாதியின் அச்சுஅசலான தோற்றத்தால் எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால் ரூ.20 கோடி பட்ஜெட் கொண்ட படம் ரூ.10 கோடியை கூட வசூலிக்கவில்லை.

ஹ்ரித்திக் ரோஷனின் ‘பைட்டர்’ படத்தை ரூ.300 கோடி வசூலால் வெற்றி என சொல்லிக்கொள்ளலாம். ஆனால் பட்ஜெட் மட்டுமே ரூ.250 கோடி எனும்போது பெரிய அளவில் மக்களை ஈர்க்காத படம் என்ற விமர்சனங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. ரன்தீப் ஹூடாவின் ‘சவார்க்கர்’ மக்களால் புறக்கணிக்கப்பட்டது. சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘யோதா’(yodha) படமும் சோபிக்கவில்லை.

அக்‌ஷய்குமாரை விடாது துரத்தும் சோகம்: இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த 3 ஆண்டுகளாகவே அக்ஷய்குமார் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அவரும் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துப் பார்த்தும் வேலைக்காகவில்லை. கடந்த ஆண்டு இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘செல்ஃபி’ படத்தில் நடித்தார். செல்ஃப் எடுக்கவில்லை. இந்த ஆண்டு டைகர் ஷெராஃப்புடன் இணைந்து ‘படே மியான் சோடே மியான்’ நடித்தார். ரூ.300 கோடியில் உருவான இப்படம் ரூ.100 கோடியை மட்டுமே வசூலித்தது.

2021-ல் வெளியான ‘சாம்ராஜ் பிருத்விராஜ்’ தொடங்கி, ‘ரக்‌ஷா பந்தன்’, ‘ராம் சேது’, ‘ஆக்ஷன் ஹீரோ’, ‘செல்ஃபி’, ‘மிஷன் ராணிகஞ்ச்’ தற்போது ‘படே மியான் சோடே மியான்’ வரை தொடர் தோல்வி. ‘சூரரைப் போற்று’ பட இந்தி ரீமேக் தான் அடுத்து அவரை காப்பாற்றும் என அவருடன் சேர்ந்து நாமும் நம்புவோம்.

பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸ்: கடந்த ஆண்டைக் காட்டிலும் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறைந்துள்ளதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு ஒரே ரூ.300 கோடி படம் ‘ஃபைட்டர்’. ‘ஷைத்தான்’ ரூ.200 கோடி. ‘க்ரியூ’, சாயித் கபூரின் ‘Teri Baaton Mein Aisa Uljha Jiya’, ‘ஆர்ட்டிகள் 370’ ஆகிய படங்கள் ரூ.100 கோடியை வசூலித்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த 6 மாதம்: வரும் மாதங்களில் தமிழ் சினிமாவிலிருந்து உருவாகி வரும் இந்தி ரீமேக் படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள. குறிப்பாக ‘சூரரைப் போற்று’ ரீமேக்கான அக்ஷய்குமாரின் ‘சர்ஃபிரா’, ‘பரியேறும் பெருமாள்’ ரீமேக்கான சித்தார்த் சத்துரவேதியின் ‘தடக் 2’, ‘தெறி’ ரீமேக்கான வருண் தவானின் ‘பேபி ஜான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கங்கனாவின் ‘எமர்ஜென்சி’, அஜய் தேவ்கன்னின் ‘Auron Mein Kahan Dum Tha’, ‘ரெய்டு 2’ ஆகிய படங்களுடன் ஆமீர்கானின் ‘சிதாரே ஜமீன்பர்’ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாசிக்க > ‘குண்டூர் காரம்’ முதல் ‘ஃபேமிலி ஸ்டார்’ வரை: தெலுங்கு சினிமாவின் ஏமாற்றம் - ஒரு பார்வை | First half of 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x