Last Updated : 25 Jun, 2024 05:07 PM

 

Published : 25 Jun 2024 05:07 PM
Last Updated : 25 Jun 2024 05:07 PM

‘குண்டூர் காரம்’ முதல் ‘ஃபேமிலி ஸ்டார்’ வரை: தெலுங்கு சினிமாவின் ஏமாற்றம் - ஒரு பார்வை | First half of 2024

இந்தாண்டு தெலுங்கு சினிமாவுக்கு அதன் முதல் 6 மாதம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஒற்றை திரை கொண்ட திரையரங்குகள் மூடப்படும் நிலைக்குச் சென்றுள்ளன. உச்ச நட்சத்திரங்களின் படங்களைக் கூட புறந்தள்ளியிருக்கும் பார்வையாளர்கள், ‘பிரமேலு’ போன்ற டப்பிங் படங்களுக்கு வரவேற்பு கொடுத்திருப்பதன் மூலம் தங்களை ஈர்க்கும் கதைகள் எங்கிருந்தாலும், அதனை தேடிச் சென்று சுவீகரித்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கான தீனியை தெலுங்கு திரையுலகம் முதல் 6 மாதங்களில் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

சரிவு கண்ட தெலுங்கு சினிமா: இந்தாண்டு சங்கராந்தி பண்டிகை தெலுங்கு ரசிகர்களை நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும். காரணம், மகேஷ்பாபுவின் ‘குண்டூர் காரம்’, தேஜா சஜ்ஜாவின் ‘ஹனு மான்’, வெங்கடேஷின் ‘சைந்தவ்’, நாகர்ஜூனாவின் ‘நான் சாமி ரங்கா’ படங்கள் வெளியாகின. இதில் ‘குண்டூர் காரம்’ ரூ.120 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது.

மகேஷ்பாபு போன்ற நடிகரின் படத்துக்கு விழாக் காலத்தில் கிடைத்த குறைந்த வசூலாக இது கருதப்படுகிறது. அதேபோல நாகர்ஜூனா, வெங்கடேஷின் படங்கள் தோல்வியைத் தழுவின. யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘ஹனு மான்’ ரூ300 கோடியை வசூலித்து சர்ப்ரைஸ் கொடுத்தது.

ஜனவரியில் வெளியான இந்தப் படங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் வரை தெலுங்கு சினிமா வறட்சியாகவே நகர்ந்தது. பிப்ரவரி வெளியீடான ரவி தேஜாவின் ‘ஈகள்’ (Eagle) வெறும் பில்டப். எங்கு பாத்தாலும், துப்பாக்கியும் ஆக்ஷனுமாக நகர்ந்த கதையில் கன்டென்ட் பலவீனத்தால் சோபிக்கவில்லை. அடுத்து சந்தீப் கிஷனின் சூப்பர் நேச்சூரல் த்ரில்லராக வெளியான ‘ஊரு பேரு பைரவகொண்டா’ (Ooru Peru Bhairavakona) தேவையான தாக்கத்தை ஏற்படுத்த தவறியது.

சுஹாஷ் நடித்த ‘அம்பாஜிபெட்டா மேரேஜ் பேண்ட்’ (Ambajipeta Marriage Band) சாதிய பாகுபாடுகள் குறித்து பேசியது. பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றபோதிலும், அது பாக்ஸ் ஆஃபீஸில் எதிரொலிக்கவில்லை. பாலாகோட் வான்வழித் தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட வருண் தேஜின் தெலுங்கு-இந்தி பைலிங்குவல் படமான ‘ஆபரேஷன் வாலண்டைன்’ (Operation Valentine), ஜீவா நடிப்பில் உருவான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘யாத்ரா 2’, ராம்கோபால் வர்மாவின் ‘வியூஹம்’ (Vyuham) படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறத் தவறின.

உகாதி பண்டிகையையொட்டி வெளியான விஜய் தேவரகொண்டா - மிருணாள் தாக்குரின் ‘ஃபேமிலி ஸ்டார்’ அதன் பலவீனமான திரைக்கதையால் படுதோல்வியைச் சந்தித்தது. அஞ்சலியின் ஹாரர் - காமெடி படமான ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ (Geethanjali Malli Vachindi) தடம் தெரியாமல் போனது. தெலுங்கு சினிமாவின் இந்த சரிவுக்கு நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும், மக்களவைத் தேர்தலும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

எதிர்பாராமல் கிடைத்த வெற்றி: உச்சநட்சத்திரங்களைத் தாண்டி கதையை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை மார்ச் 8-ல் வெளியான இரண்டு படங்கள் நிரூபித்தன. கோபிசந்தின் ‘பீமா’ மற்றும் விஷ்வாக் சென்னின் ‘காமி’ (Gaami) படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் ‘காமி’ திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.22 கோடியை வசூலித்தது.

அதேபோல சித்து - அனுபமா பரமேஸ்வர் நடிப்பில் வெளியான ‘தில்லு ஸ்கோயர்’ (Tillu Square) அசால்ட்டாக ரூ.100 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. ஸ்ரீவிஷ்ணுவின் ஹாரர் - காமெடி படமான ‘ஓம் பீம் புஷ்’ (Om Bheem Bush) படத்தை மக்கள் வரவேற்றனர். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் நல்ல வசூலை ஈட்டியது.

வரவேற்பைப் பெற்ற டப்பிங் படங்கள்: தெலுங்குப் படங்களைத் தாண்டி வேற்று மொழி டப்பிங் படங்களுக்கு பார்வையாளர்களிடையே நல்ல ஆதரவு இருந்ததை மறுக்க முடியாது. ‘ப்ரேமலு’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆடு ஜீவிதம்’ படங்கள் வசூல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது ஒருபுறம் இருந்தாலும், இதன் மூலம் மலையாள சினிமா தனது மார்கெட்டை தெலுங்கில் உருவாக்கிக் கொண்டது. அதேபோல தமிழில் வெளியான சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படங்கள் தெலுங்கில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 6 மாத எதிர்பார்ப்பு: நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கின் அடுத்த பிரமாண்ட படைப்பான பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தை தெலுங்கு ரசிகர்களைத் தாண்டி பலரும் எதிர்பார்த்துள்ளனர். ராம் பொத்தினேனியின் ‘டபுள் ஐ ஸ்மார்’, நானியின் ‘சரிபோத சனிவாரம்’, ரவி தேஜாவின் ‘மிஸ்டர் பச்சன்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’. நாக சைதன்யா - சாய் பல்லவியின் ‘தண்டல்’ ஆகிய படங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.

இதை தவிர்த்து, ஷங்கர் - ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’, ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ ஆகிய உச்ச நட்சத்திரங்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தெலுங்கு சினிமாவின் அடுத்த 6 மாத கால பாக்ஸ் ஆஃபீஸை நிர்ணயிக்க உள்ளன.

வாசிக்க > ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ முதல் ‘உள்ளொழுக்கு’ வரை: மலையாள சினிமாவின் ஏற்றம் - ஒரு பார்வை | First half of 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x