“ஒருவருக்கு ஒருவர் துணையாக...” - நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

“ஒருவருக்கு ஒருவர் துணையாக...” - நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: நடிகை ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைப்பெற்றது. இவர்களின் திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நம்பிக்கையுடன் கூடிய ஒற்றுமை பயணத்தை தொடங்கும் ஜாக்கி பக்னானி - ரகுல் ப்ரீத் சிங் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்வரும் வருடங்கள் தம்பதியர் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு. தம்பதியரின் மனமும், செயலும் ஒன்றாகவே இருக்கட்டும்.

எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து, கனவுகளையும், ஆசைகளையும் நனவாக்கும் தேடலில் ஒருவரது கைகளை மற்றொருவர் பற்றிக்கொண்டும், அன்புடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டும், குறைகளை ஆமோதித்து, நல்லனவற்றை கற்றுக்கொள்ளும் பயணமாக அமையட்டும்.

திருமண விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த முக்கியமான நாளில் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த வாழ்த்து கடிதத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் நன்றி தெரிவித்துள்ளார். தமிழில், ‘தேவ்’, ‘என்ஜிகே’, ‘அயலான்’ படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் இந்தி பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை நேற்று (பிப்.21) கோவாவில் கரம்பிடித்தார். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in