மீண்டும் பாலிவுட் என்ட்ரி: சல்மான் கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

மீண்டும் பாலிவுட் என்ட்ரி: சல்மான் கானை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாகவும், இப்படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து கடந்த 3 வருடமாக அவர் எந்தப் படமும் இயக்கவில்லை. தற்போது அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மாரச் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தில் மிருணாள் தாக்குர் நாயகியாக நடிக்க உள்ளதாகவும், மோகன்லால், வித்யூத் ஜம்வால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை இயக்க இருப்பதாகவும், ரூ.400 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

சல்மான் கான் அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளதாக தெரிகிறது. முன்னதாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த 2016-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘அகிரா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடித்திருந்தார். சல்மான் கான் படம் உறுதியாகும் பட்சத்தில் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முருகதாஸ் பாலிவுட்டில் கால்பதிப்பார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in