மதுரையில் நடிகர் சூரி சகோதரரின் மகள் திருமண விழாவில் 10 பவுன் நகை கொள்ளை 

மதுரையில் நடிகர் சூரி சகோதரரின் மகள் திருமண விழாவில் 10 பவுன் நகை கொள்ளை 
Updated on
1 min read

மதுரையில் நடிகர் சூரியின் சகோதரர் மகள் திருமண விழாவில் 10 பவுன் கொள்ளைபோனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை அருகிலுள்ள ராஜாக்கூரைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் சூரி. இவரது சகோதரர் என, கூறப்படும் ஒருவரின் மகள் திருமண விழா செப்., 9ம் தேதி மதுரை- ரிங்ரோடு சிந்தாமணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மண்டபம் ஒன்றில் நடந்தது.

இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் முகூர்த்த நேரம் நெருங்குவதற்கு முன்னதாக மணமகன் அறையில் இருந்த 5 பவுன் சங்கிலி, 3 பவுன் நெக்லஸ், 2 பவுன் பிரேஸ்லெட் என, 10 பவுன் நகைகள் திடீரென மாயமானது தெரியவந்தது.

மணமகள் அறை தொடங்கி அனைத்து இடங்களில் தேடியும் நகைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது மணமக்கள் வீட்டர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நகைகள் மாயமானதை குடும்பத்தினர் கெட்ட நிகழ்வு எனக் கருத்தினர். இருப்பினும், நகை காணாமல் போனது பற்றி எந்தவித சலசலப்புமின்றி குறித்த நேரத்தில் திருமணம் நடந்தேறியது.

இச்சம்பவம் தொடர்பாக சூரி சகோதரரின் மேலாளர் கோரிப்பாளையம் சூரியபிரகாஷ் என்பவர் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் ஆய்வாளர் கணேசன் வழக்கு பதிவு செய்தார். மணமகன் அறையில் வைத்து நகைகள் கொள்ளை ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது. திருமண மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் சேகரித்து விசாரிக்க திட்ட மிட்டுள்ளனர். மணமகன் அறையில் இருந்தவர்கள், அறைக்கு வந்து சென்றவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in