Published : 22 May 2020 04:47 PM
Last Updated : 22 May 2020 04:47 PM

'பொன்மகள் வந்தாள்' படத்தை ஓடிடி-ல் வெளியிடுவது ஏன்? - ஜோதிகா விளக்கம்

'பொன்மகள் வந்தாள்' படத்தை ஓடிடி-ல் வெளியிடுவது ஏன் என்பதற்கான காரணத்தை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கரோனா லாக்டவுன் என்பதால் ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது அமேசான் நிறுவனத்தில் 'பொன்மகள் வந்தாள்' வெளியீடு தொடர்பாக ஜோதிகா கூறியிருப்பதாவது:

"இப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள் தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். திரையரங்கில் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும். இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்புக்கும் எது நன்மையோ அதை தான் கவனிக்க முடியும்.

கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள் - இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். ஓடிடி ப்ளாட்பார்ம் என்பது கதையை மையம் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.

சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஹீரோ படத்தோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறையப் பேர் செல்ல மாட்டார்கள். ஆகையால் சிறு படங்களுக்கு ஓடிடி தளம் அற்புதமானது. வழக்கமான என் படங்களுக்கான ரசிகர்களை விட, இப்போது அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும்.

என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்த தீர்வு அவ்வளவே. கரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்கள் படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது 'பொன்மகள் வந்தாள்' படத்தை எந்த இடைவெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சினை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம். சின்ன படங்களுக்கு ஓடிடி வரப்பிரசாதம் தான்"

இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x