

கரோனா வைரஸுக்கான யுத்தத்தில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்று பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
”ஆம், இது உடல்நலத்துக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவால். ஆனால் நினைவிருக்கட்டும், கோவிட் 19 வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. சில முன்னெச்சரிக்கைகளும், வதந்திகளிடம் இருந்து விலகியிருப்பதும் அதன் தாக்கத்தைத் தடுக்க உதவும்”
இவ்வாறு பிரபாஸ் தெரிவித்துள்ளார்.