கமல் Vs சிம்பு - ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் எப்படி? | ஆக்‌ஷன் பேக்கேஜ்

கமல் Vs சிம்பு - ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் எப்படி? | ஆக்‌ஷன் பேக்கேஜ்
Updated on
1 min read

கமல்ஹாசன் - சிம்பு கதாபாத்திரங்களின் மோதலை மையப்படுத்தி, தாதா வகையறா பின்புலத்துடன் திரைக்கதை உருவாகி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தாதாவாக கமல்ஹாசன், குட்டி தாதாவாக சிம்பு இருவரும் தங்களுக்கே உரிய உடமொழிகளுடன் பிணைப்புடன் ஆரம்பித்து, எதிரெதிர் துருவங்களாக உருவெடுப்பதாக திரைக்கதை நகர்வதை ட்ரெய்லர் காட்சிகள் உறுதி செய்கின்றன. கமல்ஹாசனின் கெட்டப்புகளும் வசன உச்சரிப்புகளும் தனித்து கவனம் ஈர்க்க, இன்னொரு பக்கம் சிம்புவின் ஆக்‌ஷனில் அனல் பறக்கிறது.

நறுக்கென தெறிக்கும் வசனங்களுக்கு இடையே ஆக்‌ஷன் காட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இடையிடையே வருகின்ற ரொமான்ஸ் ஷாட்களும், துணைக் கதாபாத்திரங்களின் பிரசன்ஸும்தான் இது மணிரத்னம் படம்தான் என்பதை பறைசாற்றுகின்றன. அதேபோல், ரஹ்மானின் இசையும் கச்சிதமாக அழுத்தத்தை கூட்ட துணைபுரிந்திருக்கிறது.

மணிரத்னம் படங்களுக்கே உரிய நிதானமும் அழுத்தமும் இருக்குமா, மிஸ் ஆகுமா என்பதை வெள்ளித் திரையில்தான் காண வேண்டும். ‘நாயகன்’ பாணியில் இல்லாமல், சமகால ஆக்‌ஷன் பட பாணியில் ஒட்டுமொத்த படமும் இருக்கக் கூடும் என்பதையே ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் உணர்த்துகிறது. குறிப்பாக, இளம் ரசிகர்களை ஈர்க்கக் கூடிய வகையிலேயே ஆக்‌ஷன் பேக்கேஜாக ட்ரெய்லர் கட் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. ட்ரெய்லர் வீட்யோ...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in