‘வீர தீர சூரன் - பார்ட் 2’ ரிலீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: டெல்லி ஐகோர்ட்
சென்னை: ‘வீர தீர சூரன்-பார்ட் 2’படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது. இந்த படத்தின் தயாரிப்புக்கு ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு, பி4யூ என்ற நிறுவனம் ஃபைனான்ஸ் செய்திருந்தது. படத்தின் ஓடிடி உரிமத்தையும் இந்த பி4யூ நிறுவனத்துக்கு படத்தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை முன்கூட்டியே அறிவித்து விட்டதால், ஓடிடி உரிமத்தை விற்பனை செய்வதில் சிக்கல் இருப்பதால், ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பி4யூ நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மார்ச் 27-ம் தேதி, காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
மேலும், படத்தயாரிப்பு நிறுவனம் ரூ.7 கோடியை 48 மணி நேரத்தில் வைப்புத் தொகையாக செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நடைமுறைகளைக் கண்காணிக்க வழக்கறிஞர் ஆணையரையும் நியமித்திருந்தது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பி4யூ நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு எட்டப்பட்டதாககூறி முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமரசம் தொடர்பாக இரு தரப்பும் இன்று மாலைக்குள் எழுத்துபூர்வ ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ‘வீர தீர சூரன்-பார்ட் 2’ படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது.
