விஜய்யின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.148 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (அக்.19) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே சென்னையின் பல திரையரங்குகளில் படம் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.38 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் இதற்கு முன்பு வெளியான ’வலிமை’ படத்தின் முதல் நாள் வசூலை (ரூ.36 கோடி) ‘லியோ’ முறியடித்துள்ளதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.110 கோடியை ‘லியோ’ படம் முறியடித்துள்ளது. ‘ஜவான்’ முதல் நாளில் ரூ.129 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
