சென்னை: கட்டுமானத் தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுவதாக வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பொருளாதார வளர்ச்சியில் மனித வளத்தின் திறன் மேம்பாடு மிகவும் அவசியம். அதனால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் ரூ.45.21 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த செப்.22-ம் தேதி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற ஏதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு ரூ.800 வீதம் ஊதியம் மற்றும் உணவு, பயிற்சி காலத்தின்போது வழங்கப்படு கிறது.
இப்பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு, நிதி சேமிப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சி நிறைவு பெற்றபின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. கடந்த 22 முதல் நவ.18 வரை 21,334 கட்டுமானத் தொழிலாளர்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.
எஞ்சியுள்ள அனைத்து தொழி லாளர்களுக்கும் டிசம்பர் இறுதிக்குள் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.