

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.2.86 லட்சம் வரை சம்பளத்தில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர் டெக்னீசியன்களுக்கு வேலைவாய்ப்புகள் இருப்பதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய், அபுதாபி) பணியாற்ற எலெக்ட்ரிக்கல் உதவியாளர், எலெக்ட்ரிசியன், எலெக்ட்ரிக்கல் ஃபிட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னீசியன், எலெக்ட்ரிக்கல் ஃபோர்மேன், எலெக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர், ஆபரேஷன் மற்றும் பராமரிப்பு பொறியாளர், டெஸ்டிங் மற்றும் கமிஷனிங் பொறியாளர் ஆகியோர் தேவைப்படுகின்றனர்.
எலெக்ட்ரிக்கல் உதவியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் ஐடிஐ, டிப்ளமா, பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் அவசியம். வயது 22 முதல் 40-க்குள் இருக்க வே்ண்டும் மாதம் ஊதியம் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரை வழங்கப்படும் ரூ.2.86 லட்சம் வரை ஊதியம்.
எலெக்ட்ரிசியன் பணிக்கு 3 ஆண்டு அனுபவம் வேண்டும். சம்பளம் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை பெறலாம். அதேபோல், எலெக்ட்ரிக்கல் பிட்டர் பதவிக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரையும், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னீசியன் பதவிக்கு ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். எலெக்ட்ரிக்கல் போர்மேன் பதவிக்கு 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது வரம்பு 25 முதல் 45 வரை. ஊதியம் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.91 ஆயிரம் வரை வழங்கப்படும்.
எலெக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.78,000 முதல் ஒரு லட்சத்து 49 ஆயிரம் வரையும், ஆபரேஷன் மற்றும் பராமரிப்பு பொறியாளர் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வரையும், டெஸ்டிங் மற்றும் கமிஷனிங் பொறியாளர் பணிக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் வரையும் ஊதியம் பெறலாம்.
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பம்:
கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் (Overtime Allowance) கிடைக்கும் விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை டிசம்பர் 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணைய தளத்தில் (www.omcmanpower.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.