

கோப்புப் படம்
சென்னை: 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவத் துறையில் 2-ம் நிலை செவிலியர் உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும், பதக்கங்களை வென்று மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது மருத்துவத் துறையில் காலியாக உள்ள 2-வது நிலை செவிலியர் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘சீனியர்’ பிரிவு சாதனை
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டுமே இதற்கு தகுதியானவையாக கருதப்படும். அனைத்துப் போட்டிகளிலும் `சீனியர்' பிரிவில் பங்கேற்று பெற்ற சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
குழு விளையாட்டுகளை பொறுத்தவரை, மாநில அளவிலான போட்டிகளில் குறைந்தது 50 சதவீத போட்டிகளில் விண்ணப்பதாரர் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டும். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுகள், பாரா ஒலிம்பிக் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளை பொறுத்தவரை, வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படுவர்.
விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகள் நடத்திய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றவர்களும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்திய சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதலிடங்களைப் பிடித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ள சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.