Published : 14 Jul 2022 07:15 PM
Last Updated : 14 Jul 2022 07:15 PM

டிஜிட்டல் டூ உணர்வு நுண்ணறிவு: எதிர்கால வேலை வாய்ப்புக்கு ஏதுவான திறன்கள்

இன்று உயர்வாகக் கருதப்படும் பல வேலைகள் 2030இல் இல்லாமலும் போய்விடலாம். அப்போது நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முற்றிலும் புதிய ஒரு வேலைவாய்ப்பு உருவாகி இருக்கக்கூடும். அத்தகைய சவால்மிக்க சூழலை எதிர்கொள்வதற்கு நமக்குத் தேவைப்படும் முக்கியமான ஆறு திறன்கள் இவை:

அறிவாற்றலின் நெகிழ்வுத்தன்மை

அறிவாற்றல் நெகிழ்வுத் தன்மையை உங்கள் வசமாக்க, மாற்றங்களை எப்போதும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். பணிச் சூழல், சிந்தனைப் போக்கு, செயல்முறை, சிக்கலைத் தீர்க்கும் வழிமுறை போன்றவற்றை அடிக்கடி மாற்றியமைத்துக்கொண்டே இருப்பது நல்லது.

இந்த மாற்றங்கள் உங்களைத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கும். இது உங்கள் அறிவாற்றலின் எல்லையை விரிவுபடுத்தும். எதிர்பாராத மாற்றங்களால் நேரும் சிக்கல்களையும், புதிய சவால்களையும் திறமையுடன் எதிர்கொள்ளும் திறனையும் அது உங்களுக்கு அளிக்கும்.

டிஜிட்டல் கல்வியறிவு

நீங்கள் ‘SMAC’ (சமூகம், மொபைல், பகுப்பாய்வு, கிளவுட்) என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாளைய உலகை வடிவ மைக்கவும், எதிர்கொள்ளவும் தேவைப்படும் திறன்கள் அவை. இந்தத் திறன்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவே அடிப்படை. டிஜிட்டல் கல்வியறிவு என்பது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (Machine learning), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), தரவு அறிவியல் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது.

முடிவெடுத்தலும் மதிப்பீடு திறனும்

நான்காம் தொழிற்புரட்சியின் வாசலில் நாம் இருக்கிறோம். தரவுகள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, அவற்றை எவ்வாறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்து விளக்கும் திறன்கொண்ட நபர்களுக்கு எதிர்காலத்தில் அதிக தேவை ஏற்படும். அந்தத் திறன்களை வளர்த்தெடுப்பதற்கு முடிவெடுத்தல், மதிப்பீடு செய்தல் ஆகிய திறன்கள் உதவும்.

உணர்வு நுண்ணறிவு

மக்கள் மேலாண்மை, தலைமைப் பண்பு, ஊக்கமூட்டும் திறன், தகவல் தொடர்பு அறிவு, மோதல் தீர்வு, குழு உளவியல் ஆகியவற்றை இவையே மேம்படுத்தும். டிஜிட்டல் தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் எதிர்காலத் தொழில்களை மாற்றியமைத்தாலும்கூட, சில தொழில்களுக்கு எப்போதுமே மனித அம்சம் தேவைப்படும். அந்தத் தொழில்களில் மற்றவர்களுடன் நாம் நெருங்கிப் பழகும் சூழல் நிலவும். அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு உணர்வு சார்ந்த நுண்ணறிவு முக்கியத் தேவையாக இருக்கும்.

நேர நிர்வாகம்

எதிர்காலத்துக்கு மிகவும் தேவைப்படும் திறன் இது. நேர நிர்வாகம் என்றவுடன் ஒரு நொடியைக்கூட வீணாக்காத, அதீத திறனுள்ள இயந்திரங்களாக நம்மை மாற்றுவது என்று நினைக்க வேண்டாம். உங்கள் நேரத்தைப் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளும் வழிமுறை இது. நேரத்தை முறையாக நிர்வகித்துப் பழகினால், அது உங்கள் செயல்திறனை உடனடியாக அதிகரிக்கும். இது ஒரே நாளில் கற்றுக்கொள்ளக்கூடிய திறமை இல்லை. இருப்பினும் அனுபவசாலிகளின் ஆலோசனை, நிலையான பயிற்சி மூலம் இதை நீங்கள் எளிதில் வசமாக்கிக்கொள்ளலாம்.

தொழில் முனைவு

அடுத்த பத்தாண்டுகளில் தொழில் முனைவு வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் உயர்வாகக் கருதப்படும் திறமைகளும், தொழில்நுட்பங்களும், சிந்தனைகளும் மட்டும் வெற்றிக்குப் போதும் என்று நம்மைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது. நமது கற்றலும் அறிவும் பல தசாப்தங்களுக்குப் பின்னரும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதற்கான பாதையை அமைத்துக்கொடுக்க இந்தத் திறன்கள் உதவும்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x