

சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 14,582 பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
உதவி பிரிவு அலுவலர், வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், போதைப்பொருள் தடுப்பு ஆய்வாளர், அஞ்சல் ஆய்வாளர், உதவி அமலாக்க அலுவலர், சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் உள்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 37 விதமான பதவிகளில் 14,582 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டிருக்கிறது.
இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 27, 30, 32 என பதவிக்கு ஏற்ப மாறுபடும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 5 ஆண்டும், ஓபிசி வகுப்பினர் எனில் 3 ஆண்டும், மாற்றுத்திறனாளிகள் எனில் 10 ஆண்டு்ம் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானோர் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர். இத்தேர்வு நிலை-1, நிலை-2 என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது. முதல் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30-ம் தேதி வரை கணினிவழி தேர்வாக நடத்தப்படும்.
அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்ட தேர்வு டிசம்பர் மாதம் கணினிவழியில் நடத்தப்படும். உரிய கல்வித்தகுதியும், வயது வரம்பும் உடைய பட்டதாரிகள் www.ssc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 5-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.