காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 10 வரை அவகாசம்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 10 வரை அவகாசம்
Updated on
1 min read

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் 1,299 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்.7-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நேற்றுடன் (மே 3) முடிவடைந்தது.

இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் மே 15 வரை திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் 3-ம் பாலினத்தினருக்கு 35 ஆகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.tnusrb.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். உடற்தகுதி, தேர்வுமுறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in